Last Updated:
PM Modi | பெங்களூருவில் பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னதாக கோரமங்களா காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட நபர் HAL விமான நிலையம் மற்றும் வாழும் கலை மையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.
இதையடுத்து பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் பிரதமர் செல்லும் பாதையில் உள்ள கக்கலிபுரா அருகே, தாதகுனி என்ற இடத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அவர் வழக்கமாகவே இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளை விடுத்தவர் என்ற நிலையில், தற்போது ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டதால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வெடிபொருள்கள் எங்கிருந்து வந்தன? அவருக்கு யாராவது பின்னணியில் இருந்து உதவினார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “உலகளாவிய இந்த நெருக்கடி காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்துவதே ஒரு பெரிய தீர்மானம். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மெட்ரோ ரயில் பாதைகள் உள்ள நகரங்களில், மெட்ரோவில் மட்டுமே பயணிக்க முடிவு செய்ய வேண்டும்.
மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றை முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். கொரோனா காலத்தில், வீட்டிலிருந்து வேலை செய்தல், இணையவழி சந்திப்புகள் மற்றும் காணொலிக் கூட்டங்கள் போன்ற பல முறைகளை நாம் உருவாக்கினோம். மேலும் அவற்றுக்குப் பழகியும் போனோம்.
இன்றைய காலகட்டத்தில், இந்த முறைகளை நாம் மீண்டும் தொடங்கினால், அது தேசிய நலனுக்கு உகந்ததாக இருக்கும். வீட்டிலிருந்து வேலை செய்தல், இணையவழி மாநாடுகள் மற்றும் மெய்நிகர் சந்திப்புகளுக்கு நாம் மீண்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகரித்துவிட்டதால், அந்நியச் செலாவணியைச் சேமிப்பதிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது நமது பொறுப்பாகும்.
தங்கம் வாங்குவது என்பது, அந்நியச் செலாவணி பெருமளவில் பயன்படுத்தப்படும் மற்றொரு துறையாகும். தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, வீட்டில் எத்தனை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும் சரி, ஓராண்டு காலத்திற்குத் தங்கம் வாங்குவதில்லை என்று நாம் உறுதியேற்க வேண்டும்.” என்று பேசினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சி கண்டெடுப்பு… பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்! | PM Modi


