Last Updated:
கார்த்தி சிதம்பரம் எம்.பி, பிரதமர் மோடியை சந்தித்து, இந்தியாவில் தெரு நாய்களை கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சிறப்பு திட்டம் உருவாக்க கோரிக்கை வைத்தார்.
இந்தியாவில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார்.
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு தெரு நாய்கள் உள்ளன. அதாவது ஆறு கோடியே 20 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழப்பவர்களில், 32 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி இல்லை என்றார். இச்சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கார்த்தி சிதம்பரம், தெரு நாய்களை கட்டுப்படுத்த அறிவியல்பூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையில், சிறப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள் : அரசு மறுவாழ்வு மையத்தில் துயரம்.. நான்கு குழந்தைகள் பரிதாப பலி
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று பிரதமரை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, தெருநாய்களால் அதிகரித்து வரும் உடல்நல பாதிப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகள் குறித்து அவரது கவனத்துக்குக் கொண்டு வந்தேன். உலகளவில் தெருநாய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில், 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன. இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. உலகின் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவில் நிகழ்கின்றன. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், செயல்பாட்டில் அது பயனற்றதாக உள்ளது.
Met the Hon’ble Prime Minister today in his Parliament House office to bring to his notice the growing health & safety concerns posed by stray dogs. India is home to one of the largest stray dog populations globally, with over 6.2 crore stray dogs.
India is also endemic for… pic.twitter.com/zbvZ7avjPT
— Karti P Chidambaram (@KartiPC) March 28, 2025
தற்போதைய அமைப்பின் போதாமை குறித்து நான் கவலைகளை எழுப்பினேன். உள்ளூர் அமைப்புகளுக்கு இந்தப் பிரச்சினையை திறம்பட சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அவசர நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது. இப்பிரச்சினைக்கு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீர்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை நிறுவுமாறு நான் பரிந்துரைத்தேன். மேலும், இந்த சவாலை எதிர்கொள்ள ஒரு நீண்டகால திட்டம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
March 28, 2025 9:10 PM IST
பிரதமர் மோடியை நேரில் சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி.. தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை


