Last Updated:
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சக்தி காந்த தாஸ், பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற 2 மாதங்களில் மிகப் பெரிய பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி பிறந்தவரான சக்தி காந்த தாஸ் டெல்லியில் உள்ள பிரபல புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் வரலாறு இளங்கலை பயின்றார். இதையடுத்து இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
1980 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தமிழ்நாடு பிரிவு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அப்போது ஆட்சியராகவும் பின்னர், தொழில் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு பிரிவு அதிகாரியாக இருந்தாலும் பணிக்காலத்தில் பெரும்பகுதி, டெல்லியில் முக்கிய பதவிகளிலேயே கழித்தார்.
இதையும் படிக்க: தெலங்கானா சுரங்க விபத்து.. தொடரும் மீட்பு பணி.. 8 பேர் நிலை என்ன?
கடந்த 2014 ஆண்டில் மத்திய அரசின் வருவாய்த் துறை செயலாளராக முக்கியப் பொறுப்பில் சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பொருளாதார விவகாரத்துறை செயலாளராக மிக முக்கிய பதவிக்கு உயர்ந்தார். பின்னர் 2018 டிசம்பர் 12ல் நாட்டில் நிதித்துறையின் மிக உயர்ந்த பதவிகளுள் ஒன்றான ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கி வரலாற்றில் ஆளுநராக நியமிக்கப்பட்ட 2 வது ஐஏஎஸ் அதிகாரி சக்தி காந்த தாஸ் ஆவார்.
ஒரு முறை பணி நீட்டிப்புப் பெற்று, 6 ஆண்டுகள் பணிபுரிந்து, கடந்த 2024 டிசம்பரில் ஐஏஎஸ் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். ரிசர்வ் வங்கி வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆளுநராக இருந்த 2ஆவது நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் சக்தி காந்ததாஸ்.
எனினும் அடுத்த 2 மாதங்களிலேயே பிரதமரின் 2ஆவது முதன்மைச் செயலாளராக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது டெல்லி வட்டாரங்களில் பல புருவங்களை உயர்த்தியுள்ளது. அதற்குப் பின்னணியில் காரணங்கள் இல்லாமல் இல்லை. நாடு இக்கட்டான சூழலை எதிர்கொண்ட கொரோனா தொற்றுக் காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்து திறம்பட நிதி நிர்வாகம் செய்தவர் சக்தி காந்த தாஸ்.
இது தவிர ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி உச்சம் தொட்ட நெருக்கடியான சூழலிலும் ஆர்பிஐ ஆளுநராக இருந்தவர். உலகின் 3 மிகச் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களில் ஒருவராக தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் குளோபல் பைனான்ஸ் இதழால் தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர் சக்தி காந்த தாஸ். மேலும் 2024ல் உலக மத்திய வங்கிகள் அறிக்கையில் “A பிளஸ்” ரேட்டிங் பாராட்டையும் பெற்றார். இதுதவிர சர்வதேச நிதியம், ஜி20, பிரிக்ஸ், சார்க் அமைப்புகளில் பணியாற்றிய அனுபவத்திற்கு சொந்தக்காரர்.
உலகம் தற்போது நிச்சயமற்ற பொருளாதார சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டபோது, நிதித்துறையில் சிறப்பாக பணிபுரிந்த சக்தி காந்த தாஸ் போன்ற நிதித்துறை வல்லுநரின் அனுபவம் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பிலேயே பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புக்கு சக்தி காந்த தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது விவரம் அறிந்தவர்களின் கணக்கு.
February 23, 2025 11:55 AM IST


