இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இரு நாடுகளின் அரசுகளிடமிருந்து விரைவில் வெளிவரும் நிலையில், அவர் மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் இந்தியப் பிரஜைகளையும் நேரில் சந்திக்கும் சிறப்பு நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள www.selamatdatangmodig.com என்ற அகப்பக்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி அறிவித்தார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கோலாலம்பூரில் உள்ள ‘இந்தியா ஹவுஸில்’ நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியா – மலேசியா இடையிலான உறவு தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதைத் தூதர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இந்தியத் தொழிலாளர்களின் நலன், ஆயுஷ் விசா போன்ற புதிய முன்னெடுப்புகள் இரு நாட்டு மக்களிடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் முக்கியத் தரவுகளை வாசித்த தூதர் பி.என். ரெட்டி, மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினர் ‘பிராண்ட் இந்தியா’ என்ற அடையாளத்தின் தூதர்களாகச் செயல்படுவதைப் பாராட்டியதோடு, அவர்களின் பங்களிப்பு இந்தியப் பிரதமரின் வருகையின் போது மேலும் சிறப்பிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியின் தொடக்க அங்கமாக தேசியக் கொடியை தூதர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதைத், தொடர்ந்து அங்கிருந்த இந்தியச் சமூகத்தினருடன் இணைந்து இந்தியத் தேசிய கீதம் பாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பாரத் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கலைஞர்களின் தேசபக்திப் பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வுகளில் ஏராளமான இந்தியப் பிரஜைகளும், இந்தியாவின் நண்பர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரி ராஜா, எஸ்.சண்முகம்






