Last Updated:
இதற்கு கமெண்ட் செய்துள்ள யூஸர்கள் பலர் இதேபோன்ற பிரச்சனையை நாங்கள் அன்றாடம் சந்தித்து வருவதாக கூறியுள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 வயது சிறுமி ஒருவர் கடிதம் எழுதி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவருடைய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றதாக மாறியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்துள்ளன. போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அதிகப்படியான வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பெங்களூருவில் தீர்க்கப்படாமல் உள்ளது.
நெரிசலை குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி கடந்த ஞாயிறு அன்று பெங்களூருக்கு வருகை தந்தார். அப்போது அவர் மெட்ரோ ரயிலின் மஞ்சள் நிற வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிலையில் அவரிடம் 5 வயது சிறுமி ஒருவர் கைப்பட எழுதிய கோரிக்கை மனு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த கடிதத்தில், “நரேந்திர மோடி ஜி, பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிக கடுமையாக இருக்கிறது. இதனால் நாங்கள் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் தாமதமாக செல்கிறோம். சாலையும் மிக மோசமாக உள்ளது. எங்களுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த கடிதத்தை அபிரூப் சட்டர்ஜி என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த கடிதம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதற்கு கமெண்ட் செய்துள்ள யூஸர்கள் பலர் இதேபோன்ற பிரச்சனையை நாங்கள் அன்றாடம் சந்தித்து வருவதாக கூறியுள்ளார்கள்.
August 13, 2025 11:36 AM IST


