பியூனஸ் அயர்ஸ்: இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் சென்றடைந்தார். பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்தியர்கள், இந்திய தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியும், பாரம்பரிய நடனமாடியும் அவரை வரவேற்றனர்.
தனது அர்ஜென்டினா வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “பியூனஸ் அயர்ஸில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பால் கவுரவம் பெற்றுள்ளேன். இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்து வந்தாலும், இந்திய உணர்வு எவ்வாறு பிரகாசமாக உள்ளது என்பதைப் பார்ப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியூட்டுகிறது. கலாச்சார தொடர்பு என்று வரும்போது தூரம் ஒரு தடையல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “அர்ஜென்டினா உடனான உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இருதரப்பு பயணமாக பியூனஸ் அயர்ஸில் தரையிறங்கி உள்ளேன். அதிபர் ஜேவியர் மிலேயை சந்தித்து அவருடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
57 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. இரு தரப்பு பயணமாக இந்திய பிரதமர் ஒருவர் அர்ஜென்டினா வருவது 57 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. பிரதமராக மோடி அர்ஜென்டினா வருவது இது இரண்டாவது முறை. 2018ம் ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அர்ஜென்டினாவுக்கு வருகை தந்தார்.
பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியா-அர்ஜென்டினா இடையேயான கூட்டாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் ஜேவியர் மிலேயுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் வருகை, இந்தியாவுக்கும், அர்ஜென்டினாவுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா பயணத்தை அடுத்து, பிரேசில் செல்ல உள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பின்னர், அரசு முறைப் பயணமாக நமீபியா செல்லும் பிரதமர், அதனைத் தொடர்ந்து தாயகம் திரும்ப உள்ளார்.