
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக உட்கட்சி சதி நிலவுவதாகவும் நஞ்சூட்ட முயற்சிப்பதாகவும் பரப்பப்படும் வதந்திகள் அரசியல் எதிரிகளின் கேலிக்கூத்து என ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக ஆளும் கட்சிக்குள் உள்ளகக் குழுவொன்று செயல்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வேடிக்கையான கேலிக்கூத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச பத்திரிகையான ‘சிலுமின’வுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே ரில்வின் சில்வா இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தை மையமாகக் கொண்ட ஒரு குழுவினர், பிரதமரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் இதன்போது முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்வது தங்களுக்குப் பெரும் சாதகமாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டிய அவர், எவரும் நம்பாத இவ்வாறான அடிப்படையற்ற புனைவுகளையே நம்பியிருப்பது எதிர்த்தரப்பினருக்குத்தான் பாதகமாக முடியும் என்றும், இன்னும் 10 வருடங்கள் கழிந்தாலும் இந்த யதார்த்தம் மாறப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
பெலவத்தையை மையமாகக் கொண்ட பாரம்பரிய மார்க்சிய பின்னணியைக் கொண்ட ஜே.வி.பிக்கும், கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட கல்வித்துறையினர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்திக்கும் (NPP) இடையில் முரண்பாடுகள் நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையிலேயே, அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ஜே.வி.பியையும் தேசிய மக்கள் சக்தியையும் ஒருபோதும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்ட ரில்வின் சில்வா, வானவில்லைப் போன்று இடையே கோடு கிழித்துத் தங்களைப் பிரித்துவிட முடியாது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தலைவர்களுக்கு இடையிலான பிணைப்பு ஆழ்ந்த பரஸ்பர அன்பையும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் விவரித்தார்.
எதிர்க்கட்சிகளின் போலிப் பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தானும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இணைந்து பிரதமருக்கு நஞ்சூட்டத் திட்டமிடுவதாகக் கூட முன்னர் சதி வதந்திகள் பரப்பப்பட்டமையைச் சுட்டிக்காட்டினார்.
பிளவுபட்டு நிற்கும் தங்களது சொந்தக் கட்சிகளின் கண்ணாடியினூடாகவே எதிர்த்தரப்பினர் தேசிய மக்கள் சக்தியை எடைபோடுவதாகவும், தாங்களும் அவர்களைப் போன்று இயங்கியிருந்தால் இவ்வளவு தூரம் வெற்றிப் பயணத்தை மேற்கொண்டிருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

