கோலாலம்பூர்,
கடந்த சனிக்கிழமை டத்தாரன் மெர்டேக்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போன்ற உருவம் கொண்ட பொம்மையை கொண்டு வந்து அடித்த சம்பவத்தில் தொடர்புடையதாக இரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆகும். அவர்கள் சம்பவம் தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவேற்ற பயன்படுத்தியதாக நம்பப்படும் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ மொகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாகவும், இருவருக்கும் விரைவில் ரிமாண்டு விண்ணப்பம் செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 504வது பிரிவு, 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் 233வது பிரிவு மற்றும் 1955ஆம் ஆண்டின் சிறிய குற்றச் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
பொதுமக்கள் சமூக ஊடகங்களை சமூகவெறுப்பைத் தூண்டும் வகையில் பயன்படுத்தக்கூடாது எனவும், அப்படி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.
இதனிடையே பேரணி தொடர்பில் செகுபார்ட் என்று அழைக்கப்படும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பட்ருல் ஹிஷாம் கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ரஃபீக் ரஷீத் உறுதிப்படுத்தினார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செகுபார்ட் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் செகுபார்ட், விசாரணை அதிகாரி இடையே நாளை காலை 11 மணிக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டதால், தடுப்புக்காவல் தேவையில்லை. புக்கிட் அமானில் ஆஜராவதாக செகுபார்ட் உறுதிமொழி அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.