ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தில் புதிய கட்டடத் திறப்பின் வாயிலாக மலேசிய வருமான வரி வாரியம் மீண்டும் சரித்திரம் படைத்துள்ளது.


அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தத் திறப்பு விழாவில் சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்டு கட்டடத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
அவரோடு பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோ, நிதித்துறை துணை அமைச்சர் லிம் ஹுய் இங், பினாங்கு மாநில முதலாவது துணை முதல்வர் டத்தோ ஜொஹான் மாமூட், வாரியத்தின் செயற்குழுத் தலைவரும் நடவடிக்கைப் பிரிவுத் தலைமைச் செயலாளருமான ஜோன் பெட்ரிக் அந்தோணிசாமி, வாரிய செயற்குழு உறுப்பினர் டத்தோ பெட்ரோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதற்கு முன் 1949ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் வருமான வரி கிளை (ஹஸில்) திறக்கப்பட்டது. அப்போதைய மலாயாவில் திறக்கப்பட்ட தொடக்கக்கட்ட கிளைகளுள் இதுவும் ஒன்று.
இந்நிலையில் இந்தப் புதிய கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து இம்மாநிலத்தின் வருமான வரித்துறையின் செயல்பாடுகள் இன்னமும் மேலோங்குகின்றன.
இந்த அறிமுக விழாவில் உரையாற்றிய பிரதமர் ஆக்கப்பூர்வமான, சுமையை ஏற்படுத்தாத வரி விகித உருமாற்றம், மடானி பொருளாதாரத்தின் வெற்றிக்கான திறவுகோலாகும் எனக் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய வருமான வரி வாரியத் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக், பினாங்கு மாநில ஹஸில் கட்டடக் கட்டுமானத் திட்டம் சுற்று வட்டார மக்களின் வரி விவகாரங்களை எளிதாக்கக்கூடிய வல்லமையைக் கொண்டுள்ளது. 20 மாடி கட்டடமான இது முறையான தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது என்றார்.
இதனிடையே பினாங்கு மாநில ஹஸில் அலுவலகம் இவ்வாண்டு மே 31ஆம் தேதி வரையில் ஈட்டிய வரி சேகரிப்பு அடைவு நிலை 3.5 42 பில்லியன் ரிங்கிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


