கோலாலம்பூர்:
பினாங்கின் 13 பாரம்பரிய உணவுகளை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சமைக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், அது குறித்த குழப்பம் நீடிப்பதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் சமையல் வேலைக்கு வரத் தயங்குவதால், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிலை நடத்துவது சாத்தியமில்லை என உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அசாம் லக்சா, சார் குவே தியாவ், ஹோக்கியன் மீ, நாசி லெமாக் உள்ளிட்ட 13 வகை உணவுகளை வெளிநாட்டினர் சமைக்கக்கூடாது என நகராட்சி கூறியுள்ளது.
இந்த நிலையில் “நாங்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்த பின்னரே சமைக்க அனுமதிக்கிறோம். தரம் குறைந்தால் எங்கள் வியாபாரம்தான் பாதிக்கும்” என உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், நாசி லெமாக் போன்ற உணவுகளைப் பரிமாறுவது ‘சமையல்’ கணக்கில் வராது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்தத் தடை தற்போது நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமே அமலில் உள்ளது. இதை மற்ற இடங்களுக்கும் விரிவாக்குவது குறித்து இன்னும் ஆலோசனைகள் நடந்து வருவதாக பினாங்கு உள்ளாட்சித் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், தொழிலாளர் பற்றாக்குறையால் பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
The post பினாங்கு உணவகங்களில் வெளிநாட்டினர் சமைக்கத் தடை: சிக்கலில் உரிமையாளர்கள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

