புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 100 ஆமைகள் மற்றும் மென் ஓடு ஆமைகளை (Softshell Turtles) முறையான உரிமமின்றி வளர்த்து வந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபர், வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையினரால் (Perhilitan) கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டர்வொர்த், பகான் லாலாங் (Bagan Lalang) பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வீட்டில் இச்சோதனை நடத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் போலீசாருடன் இணைந்து நடத்தப்பட்ட இச்சோதனையில், பல பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 94 ஆமைகள் மற்றும் 6 மென் ஓடு ஆமைகள் கண்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்ட உயிரினங்களின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று,பினாங்கு மாநில பெர்ஹிலிட்டன் இயக்குநர் முகமட் ஜைடே முகமட் ஜின் கூறினார்.
இந்த ஆமைகள் அனைத்தும் மாநிலத்தைச் சுற்றியுள்ள ஆறுகளில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மற்ற நபர்களிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆமைகளைச் சேகரிக்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகியிருக்கலாம் என்றும், இந்த ஆமைகள் வழிபாட்டுத் தலங்களில் மதச் சடங்குகளுக்காக விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு ஆமையின் அளவு மற்றும் வகையைப் பொறுத்து 20 ரிங்கிட் முதல் 200 ரிங்கிட் வரை விற்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் முறையான பயண ஆவணங்களை வைத்துள்ளார். அவர் மேல் விசாரணைக்காக 4 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 716) பிரிவு 60(1)(a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட உள்ளூர் ஆமைகள் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் காடுகளில் விடப்படும். வெளிநாட்டு வகை ஆமைகள் சுங்காய் (Sungkai) பகுதியில் உள்ள மீட்பு மையத்திற்குத் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்படும்.
வனவிலங்குகளை வளர்க்க விரும்புவோர் முறையான உரிமம் பெற வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெர்ஹிலிட்டன் எச்சரித்துள்ளது.




