Last Updated:
கோப்பையை உடனடியாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் முறையாக ஒப்படைத்து, ACC-யின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் – பிசிசிஐ
ஆசிய கோப்பையை இந்திய அணியிடம் வழங்குவதற்கு கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி மறுத்துவந்த நிலையில் பிசிசிஐ-யின் எதிர்ப்புக்கு பணிந்து கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
துபாயில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இருப்பினும் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி வழங்கவிருந்ததால் இந்திய அணி வீரர்கள் மறுத்து புறக்கணிப்பு செய்தனர்.
இதற்குப் பதிலடியாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரான நக்வி, கோப்பை வழங்கும் வழக்கமான விழாவை நடத்த அனுமதிக்க மறுத்துவிட்டார். மேலும், ACC அதிகாரிகளை அழைத்து கோப்பை மற்றும் பதக்கங்களை மைதானத்தில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்று முடிந்தது. அப்போது BCCI தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ஆசியக் கோப்பையானது ACC-க்கு சொந்தமானது என்றும், அதை PCB தலைவர் தனது ஓட்டல் அறைக்கு எடுத்துச் சென்றது சரியல்ல என்றும் கடுமையாக விமர்சித்தார்.
சுக்லா, கோப்பையை உடனடியாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவிடம் முறையாக ஒப்படைத்து, ACC-யின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக, BCCI செயலாளர் தேவாஜித் சைகியா, நக்வியின் இந்தச் செயல்களை “துரதிர்ஷ்டவசமானது மற்றும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது” என்று கூறி சாடியிருந்தார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நக்வி தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தாலும், கோப்பையைத் திரும்பக் கொடுக்க மறுத்துவிட்டார். இந்திய அணிக்குக் கோப்பை வேண்டுமென்றால், அணித் தலைவர் தனிப்பட்ட முறையில் துபாயில் உள்ள ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை BCCI உடனடியாக நிராகரித்தது. இறுதிப் போட்டியின் அன்றே தேவைப்படாத நிலையில், இப்போது இந்தியத் தலைவர் ஏன் துபாய்க்குப் பயணம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிசிசிஐயின் கண்டனத்திற்கு பணிந்துள்ளள மொஹ்சின் நக்வி கோப்பையை போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்துள்ளார்.
October 01, 2025 3:57 PM IST


