பிகேஆர் கட்சிக்குள் நிலவும் தேவையற்ற உள்விவகாரங்களும் மோதல்களும் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஜொகூர் மாநில பிகேஆர் மாநாட்டில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் ஆற்றிய உரையில், கட்சியின் பலம் என்பது தனிநபர் விமர்சனங்களில் இல்லை, மாறாக அனைத்து நிலைகளிலும் பேணப்படும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தில்தான் அடங்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் கொள்கைகளையும் தலைமையையும் பகிரங்கமாக விமர்சிக்கும் போக்கு, எதிர்தரப்பினர் தங்களுக்குச் சாதகமாகச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும் என்று ரமணன் கவலை தெரிவித்தார். குறிப்பாக, சமீபகாலமாக கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கட்சிக்கு எதிராக முன்வைத்து வரும் விமர்சனங்களை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய போக்குகள் கட்சியின் ஒற்றுமையைச் சீர்குலைக்கக்கூடும் என்பதைத் தொனிக்கும் வகையில் பேசினார்.
“தற்போது நாம் ஒருவருக்கொருவர் வெளியில் அறிக்கை போர் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல. கட்சியில் நிலவும் எத்தகைய கருத்து வேறுபாடுகளாக இருந்தாலும், அவை உள்வழிகள் மூலம் மட்டுமே விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்,” என்று ரமணன் ஆணித்தரமாகத் தெரிவித்தார். உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது ஆளும் கட்சியின் பிரதான கடமை என்பதால், அதற்கு உட்கட்சி ஒற்றுமை மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மனிதவள அமைச்சருமான ரமணன், ஜொகூர் மாநில பிகேஆர் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் எதிர்வரும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள இப்போதிருந்தே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து, ஒரு ஒருங்கிணைந்த குழுவாகச் செயல்பட்டால் மட்டுமே கட்சியின் வெற்றியைத் தக்கவைக்க முடியும் என்பதை அவர் நினைவுறுத்தினார்.
இந்த மாநாடு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிடுவதற்கான ஒரு முக்கியக் களமாக அமைந்தது. கட்சியின் மீது விசுவாசம் கொண்ட தொண்டர்கள், தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் அணிதிரள வேண்டும் என்றும், சுயநல அரசியலைத் தவிர்த்து மக்கள் நலப் போராட்டமே கட்சியின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, சீர்திருத்தப் பாதையில் பயணிக்கும் பிகேஆர், எத்தகைய உள்முக நெருக்கடிகளையும் முறியடித்து பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கத்தைப் பலப்படுத்தும் என்று ரமணன் உறுதிபடக் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தின் நீடிப்புக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பிகேஆர் கட்சியின் ஒருமைப்பாடே அடித்தளம் எனக்கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
The post பிகேஆர் ஒற்றுமையே ‘மடானி’ அரசாங்கத்தின் அஸ்திவாரம்; உட்கட்சிப் பூசல்களைத் தவிர்ப்போம் – ரமணன் அறைகூவல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.


