பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11- ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் தலா 6 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அனந்த் சிங் மொகாமா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சோட்டே சர்க்கார் என்று அழைக்கப்படும் அனந்த் சிங், கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் 28 கிரிமினல் வழக்குகள் தன் மீது நிலுவையில் உள்ளதாக தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
அனந்த் சிங்கிற்கு 37 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் அவரது மனைவியும் தற்போதைய மொகாமா எம்எல்ஏவுமான நீலம் தேவிக்கு 62 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொகாமா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அனந்த் சிங். அந்தக் காலகட்டத்தில் அவர் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த போது சிறையில் இருந்தவாறு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் மொகாமா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அனந்த் சிங் மீதான வழக்கை விசாரித்த நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது.
தண்டனையை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், அனந்த் சிங்-கிற்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் அவர் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, தனது ஆதரவாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு அனந்த் சிங் விருந்தளித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், பாரம்பரியத் தொகுதியான மொகாமாவில் தனது பலத்தை நிரூபிக்கவும், ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தவும் விருந்து மற்றும் பேரணி நடத்தப்பட்டது.
October 16, 2025 3:15 PM IST
பிகார் தேர்தல்: 28 கிரிமினல் வழக்குகள்.. 25 ஆயிரம் பேருக்கு விருந்து! தடபுடலாக வேட்புமனு தாக்கல் செய்த தே.ஜ.கூ வேட்பாளர்

