Last Updated:
பிகார் தேர்தலில் நாளையோடு வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகாமல் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
பிகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. இதில், முதல் கட்டமான வரும் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
121 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையோடு (17ஆம் தேதி) நிறைவடைகிறது. இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.
இதனையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துவருகின்றனர். மறுபக்கம், அந்தக் கூட்டணியினர் தீவிர வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர் கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடே முடிவடையாமல் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று, கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் போனில் பேசியுள்ளனர். இருந்தபோதிலும், இன்னும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
கட்சியின் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசிக்கொண்டிருக்க நாளையோடு (17ஆம் தேதி) வேட்புமனு முடிவடைய உள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், “வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். மிக விரைவில் முடிவு வரும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியை பிடிக்கப்போகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களைப் பற்றி சிந்திக்காமல், ஏன் எங்களைப் பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்?” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மகாகத்பந்தன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கட்சி 18 பெயர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருக்கும் நிலையில், மகாகத்பந்தன் கூட்டணி தலைவர்கள் ஒரு பக்கம் தொகுதி பங்கீடு குறித்து பேசி வர மறுபக்கம் அக்கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துவருவதும், கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
October 16, 2025 4:36 PM IST


