பிகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட முன்னிலையில் வகிக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் 66.9 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இதனால், பிகாரில் உள்ள 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 46 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, பிகாரில் என்டிஏ கூட்டணி மிக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியு கட்சி 75 தொகுதிகளிலும் என மொத்தம் 174 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே போல் மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் என மொத்தம் 67 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆரம்பத்தில் 5 தொகுதிகள் வரை முன்னிலை வகித்தது. ஆனால், போகப் போக பின்னிலை வகிக்கத் தொடங்கியது. இதர கட்சிகள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் உள்ளார். அதேபோல் தாராப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி முன்னிலையில் உள்ளார். மோகாமா தொகுதியில் போட்டியிட்ட அனந்த்குமார் சிங் முன்னிலையில் உள்ளார்.
ஆர்ஜேடி சார்பில் போட்டியிட்ட சப்ரா தொகுதியில் போட்டியிட்ட நடிகரும், பாடகருமான சத்ருகன் யாதவ் முதலில் முன்னிலையில் இருந்து இப்போது பின்னடைவை சந்தித்து வருகிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட பாடகி மைதிலி தாகூர் முன்னிலையில் உள்ளார்.
பிகாரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் தொகுதியில் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. 53 தொகுதிகளில் 38 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. சீமாஞ்சல் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதற்கிடையே, பீகார் தேர்தலில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு யாதவின் மூத்த மகன் தேஜஸ்வி யாதவ்-ன் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் பின்னிலையில் உள்ளார். தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் (JJD) என்ற புதிய கட்சி தொடங்கி மஹுவா தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bihar Sharif,Nalanda,Bihar
November 14, 2025 10:35 AM IST

