பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில், ’இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதையடுத்து, 71 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக, எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு நேற்று இரண்டு கட்டங்களாக வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது. அதன்படி ராம் நகர் தொகுதியில் நந்த் கிஷோர் ராம், நர்கடியகஞ் தொகுதியில் சஞ்சய் பாண்டே, லெளரியா தொகுதியில் முன்னாள் அமைச்சர் வினய் பிகாரி ஆகியோரை பாஜக களமிறக்கியுள்ளது. பாஜகவில் இணைந்த ஒரே நாளில், பாடகி மைதிலி தாகூருக்கு, அலிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை சிட்டிங் எம்.பி.க்களுக்கோ அல்லது மத்திய அமைச்சர்களுக்கோ பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. புது முகங்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேட்பாளர்களை பாஜக தேர்வு செய்துள்ளது.
பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்தும் 57 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில், அமைச்சர்கள் உட்பட 23 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்ட பட்டியலில் குர்மிஸ், குஷ்வாகாஸ் பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி சோன்பார்சா, ராஜ்கிர், ஏக்மா உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டி வந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய ’இந்தியா’ கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி, ரகோபூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஏற்கெனவே அங்கு அவர் இருமுறை வெற்றி அடைந்துள்ளார். மூன்றாவது முறையாகவும் அதே தொகுதியை அவர் தேர்ந்தெடுத்து, தனது தந்தை லாலு பிரசாத், தாயார் ராப்ரி தேவியுடன் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ரகோபூர் தொகுதியில் தேஜஸ்விக்கு எதிராக பாஜக சார்பில் சதிஷ்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்பே காங்கிரஸ் கட்சியும் 13 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், மாநில தேர்தல் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ஷகீல் அகமது கான் ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று பாட்னா திரும்பினர். அப்போது விமான நிலையத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், வேட்பாளர் ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி திவ்யா கவுதம் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் திகா (Digha) தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். பிகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
Bihar Sharif,Nalanda,Bihar
October 16, 2025 6:19 AM IST
பிகார் தேர்தல்… பின்வாங்கிய பி.கே.. பேச்சுவார்த்தை முடியும் முன்பே அதிரடி காட்டிய தேஜஸ்வி, காங்கிரஸ்!

