Last Updated:
மகாபந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்காமல் தொடர் இழுபறியில் இருந்துவருகிறது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.
இதில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
இந்தக் கூட்டணிக்கு எதிராக, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆகியவை அங்கம் வகிக்கும் மகாபந்தன் கூட்டணி களம் இறங்குகின்றது.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி, பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்திற்குப் பின் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 9 பெண்கள் உட்பட 71 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதேசமயம், எதிர் கூட்டணியான மகாபந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்காமல் தொடர் இழுபறியில் இருந்துவருகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தேதியே துவங்கிவிட்ட நிலையில், இன்னும் மகாபந்தன் கூட்டணி தொகுதி பங்கீடு முடிவடையாமல் இருப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
குறிப்பாக மகாபந்தன் கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி கடந்தத் தேர்தலில் 144 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 135 இடங்களில் போட்டியிட போவதாகவும், கடந்த தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிடபோவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே எந்தக் கட்சி எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும்.
October 14, 2025 8:19 PM IST


