Last Updated:
பிகார் தேர்தலில் ராகேஷ் சின்ஹா, சந்தோஷ் ஓஜா உள்ளிட்ட பாஜகவினர் இரு இடங்களில் வாக்களித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி, உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டம்.
பிகார் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதற்கட்ட தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில், வாக்களித்த பாஜக தலைவர்கள் சிலர், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
குறிப்பாக, பாஜக முன்னாள் எம்.பி. ராகேஷ் சின்ஹா கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி துவாரகாவில் தனது வாக்கினை செலுத்தியதாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்ட புகைப்படத்தை எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில், தனது சொந்த ஊரான பெகுசராய் தொகுதியிலும் ராகேஷ் சின்ஹா வாக்களித்துள்ளார்.
இதேபோன்று, டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக தலைவரான சந்தோஷ் ஓஜா, பாஜகவை சேர்ந்த நாகேந்திரகுமார், சஞ்சய் குமார் உள்ளிட்டோரும் டெல்லி மற்றும் பிகாரில் வாக்களித்ததற்கான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ளன.
டெல்லியில் வாக்களித்த இவர்கள், தங்கள் முகவரியை மாற்றிக் கொண்டு பிகாரிலும் வாக்களித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் நிலையில், இது எப்படி சாத்தியமானது என்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது அப்பட்டமான வாக்கு முறைகேடு எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், ஆதாரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவின் நிலவரம், முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
November 07, 2025 7:55 PM IST
பிகார் தேர்தலில் அம்பலமான வாக்கு மோசடி? பாஜகவினர் இரண்டு ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


