Last Updated:
பிகார் மாநிலத்தில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிகார் மாநிலத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், தலைநகர் பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் மையமும் இணைந்து பாலூட்டும் பெண்களிடம் தாய்ப்பால் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டன. இதில் 17 முதல் 35 வயதுடைய பெண்களிடம் இருந்து தாய்ப்பால் மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அந்த ஆய்வின் முடிவில் போஜ்பூர், சமஸ்திப்பூர், பெகுசராய், நாளந்தா, கதிஹார் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதிர்ச்சியூட்டும் விதமாக, தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்தது. தாய்ப்பால் மாதிரிகளில் சராசரியாக லிட்டருக்கு 5 புள்ளி 25 மில்லிகிராம் அளவிற்கு யுரேனியம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. அணு உலை, அணுகுண்டு போன்ற நாசகார கருவிகளைத் தயாரிக்க உதவும் யுரேனியம் கலந்திருந்ததால், அவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதுடன், குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஆபத்து ஏற்பட்டதும் அறிந்து ஆய்வுக்குழுவினர் திடுக்கிட்டனர். இதுதவிர வளர்ச்சிக் குறைபாடு, நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டதையும் மருத்துவக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது.

பிகாரில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பெரும்பாலும் ஆழ்துளைக் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். பிகாரில் பல இடங்களில் ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத நீர் அப்படியே திறந்துவிடப்படுகின்றன. அவை நிலத்தடி நீரில் ஊடுருவியுள்ளன. இதேபோல், பயிர்களுக்கு அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் உடலில் யுரேனியம் போன்ற நச்சுப்பொருள் கலந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
November 23, 2025 11:58 AM IST


