Last Updated:
சிராக் பஸ்வான் பிகாரிகள் மீது பிற மாநிலங்களில் அவமதிப்பு இருப்பதாகவும், என்.டி.ஏ. ஆட்சி வந்தால் பிகாருக்கு பொற்காலம் வரும் எனவும் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.
பிகாரிகள் மற்ற மாநிலங்களில் அவமதிக்கப்படுவதைப் பார்த்து காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டுவதாக, ராம் விலாஸ் பிரிவு லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாப்ராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சிராக் பஸ்வான் பங்கேற்றுப் பேசினார். அப்போது பிகார் மீதான மற்ற மாநிலங்களின் பார்வை குறித்து பேசிய அவர், மற்ற மாநிலங்களில் பிகாரிகள் அவமதிக்கப்படுவதை பொறுக்கமுடியாமலேயே தான் அரசியலில் நுழைந்ததாக கூறினார்.
பிகாரி என்ற வார்த்தைகூட அவமதிப்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
பஞ்சாப்பிலும், தெலங்கானாவிலும் பிகாரிகளை காங்கிரஸ்காரர்கள் அவமரியாதை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், காங்கிரஸ்காரர்கள் பிகாருக்கு வந்து வாக்கு கேட்பதை எப்படி ஏற்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளும் பிகாருக்கு ஒரு பொற்காலமாக இருக்கும் என தெரிவித்துள்ள சிராக் பஸ்வான், பிகாரின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி பிகாரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிகார் தொழிலாளர்கள் அவமதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இன்று என்.டி.ஏ. கூட்டணியைச் சேர்ந்த லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், அதே கருத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து என்.டி.ஏ. தலைவர்கள் இப்படியான கருத்துகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
October 31, 2025 4:12 PM IST
“பிகாரி என்ற வார்த்தை அவமதிப்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது” – என்.டி.ஏ. கூட்டணி தலைவர் சிராக் பஸ்வான்


