Last Updated:
பிகாரில் இந்திய தேர்தல் ஆணையம் 3 லட்சம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, 7 நாட்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய 3 லட்சம் வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையம், 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1 அன்று வெளியிட்டது. மேலும், 65 லட்சம் வாக்காளர்களின் பெயரை நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், குடியுரிமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்ததில் முரண்பாடு கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பான கள ஆய்வில் அவர்கள் வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நோட்டீஸ் அனுப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண், மதுபானி, கிஷன்கஞ்ச், பூர்னியா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். நோட்டீஸ் பெற்றவர்கள், அடுத்த 7 நாட்களுக்குள் அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
August 29, 2025 11:49 AM IST


