திருவனந்தபுரம்: மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் – பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், “மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற கேரள அரசின் முடிவு, ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்பதற்கான சான்றாகும். சிபிஎம் – பாஜக இடையே நீண்டகாலமாக இருந்த உறவு இப்போது வெளிவந்துள்ளது.
இந்த ரகசிய புரிதலின் ஒரு பகுதியாகவே, அமைச்சரவையில்கூட விவாதிக்காமல், பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணைவது என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி அறிவித்துள்ளார். கேரள முதல்வரின் மகனுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிந்ததை அடுத்து இந்த முடிவை கேரள அரசு எடுத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சிபிஐ தலைவர்கள், தற்போது தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இடது ஜனநாயக முன்னணியில் ஆதிக்கம் செலுத்தும் சிபிஎம், பாஜகவிடம் இருந்து அரசியல் சலுகைகளைப் பெற்று வருகிறது. சிவன் குட்டி கூறி இருப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கேரள அரசின் முடிவுக்கு இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து அதிக அளவு நிதியை பெற வேண்டும் என்ற மாநிலத்தின் கொள்கையுடன் இது ஒத்துப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொதுக்கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, “தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தாலும் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிதி உதவியைப் பெறுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமக்ர சிக்ஷா நிதி உட்பட மத்திய அரசிடம் இருந்து குறைந்தது ரூ. 1,500 கோடி வர வேண்டி உள்ளது.
நமது மாணவர்களுக்கான மத்திய நிதியை தொழில்நுட்ப காரணங்களுக்காக இழக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிதி மாணவர்களுக்கான திட்டங்களை, குறிப்பாக விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு செயல்படுத்த ஏதுவாக இருக்கும். உயர்கல்வித்துறை, சுகாதாரத்துறை, வோளாண்டுமைத் துறைகளில் மத்திய அரசுடன் கேரளா ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளது. எனவே, நாம் ஏன் இந்த திட்டத்தை ஏற்கக்கூடாது?” என தெரிவித்திருந்தார்.