இருப்பினும், மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதற்கான தகுதி, வரம்புகள் மற்றும் உங்கள் பிஎஃப் சேமிப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.
1. திருமணம் மற்றும் படிப்புக்காக பிஎஃப் பணத்தை எடுத்தல்
திருமணம் அல்லது மேற்படிப்புக்காக பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டியிருந்தால், ஒருவர் சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதாவது, நீங்கள் குறைந்தது ஏழு வருடங்கள் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், மேலும் உங்கள் பிஎஃப் கணக்கில் குறைந்தது ரூ.1,000 -ஆவது இருக்க வேண்டும்.
மேலும், உங்கள் சொந்த பங்களிப்பில் வட்டி உட்பட 50% வரை, நீங்கள் திரும்பப் பெறலாம். திருமணம் மற்றும் கல்விக்காக நீங்கள் பணம் எடுத்தால், உங்கள் வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் சொந்த திருமணம், உங்கள் உடன்பிறந்தவரின் திருமணம் அல்லது உங்கள் குழந்தையின் திருமணத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில், கல்விக்காக, உங்கள் மகன் அல்லது மகளின் மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு மட்டுமே பணம் எடுப்பது அனுமதிக்கப்படுகிறது. இந்த பணத்தை எடுப்பது உங்கள் ஓய்வூதிய சேமிப்பை பாதிப்பதால், அவற்றை கவனமாகப் பயன்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
2. வீடு வாங்க அல்லது கட்டுவதற்காக பிஎஃப் பணத்தை பெறுதல்
வீடு வாங்க அல்லது கட்டுவதற்காக நீங்கள் உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கென்று சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் அல்லது உங்கள் மனைவியின் பெயரில் அல்லது உங்கள் இருவரின் பெயரில் சொந்தமானதாக இருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட அந்த சொத்து சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாமல் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த செயல்முறைக்கு, நீங்கள் ஐந்து வருட சேவையை முடித்திருக்க வேண்டும்.
3. மருத்துவச் செலவுக்காக பிஎஃப் பணத்தை எடுப்பது
மருத்துவ சிகிச்சைக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால், பிஎஃப் இதற்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஏனெனில், நீங்கள் சேர்ந்த உடனேயே எந்த நேரத்திலும் பணத்தை எடுக்க முடியும்.
மருத்துவ காரணங்களுக்காக நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம், இதற்கென்று குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை. அதே நேரத்தில், நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச தொகை, உங்களது ஆறு மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது உங்கள் மொத்த பிஎஃப் இருப்பு ஆகியவற்றில் மிகக் குறைவானதாக இருக்க வேண்டும்.
பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவது எப்படி?
உங்கள் பிஎஃப் தொகையை ஆன்லைனில் அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிப்பதன் மூலம் பணத்தை திரும்பப் பெற முடியும்.
ஆன்லைன் மூலம் பிஃஎப் பணத்தை எடுக்க, www.epfindia.gov.in என்கிற இணையதளத்திற்கு சென்று யூஏஎன் மெனுவின் கீழ் உள்ள ‘கிளெய்ம்’ பிரிவுக்கு முதலில் செல்ல வேண்டும். அதில், அட்வான்ஸ் தொகையை பெறுதல் என்பதைத் தேர்ந்தெடுத்து, காரணத்தைத் தேர்வு செய்து, உங்களது கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் கோரிக்கையின் நிலையையும் ஆன்லைனிலேயே கண்காணிக்க முடியும். உங்களது வங்கிக் கணக்கு சரிபார்ப்புக்காக, ஸ்கேன் செய்யப்பட்ட காசோலையை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.
மறுபுறம், ஆஃப்லைனில் பணத்தை எடுக்க, அருகிலுள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) அலுவலகத்திற்கு நேரில் சென்று தேவையான ஆவணங்களையும், நேரடி பணம் எடுத்தல் படிவத்தையும் விண்ணப்பித்து சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக, ஆன்லைன் கோரிக்கைகள், சுமார் 3–4 நாட்களில் செயல்படுத்தப்பட்டு, பணம் உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நேரங்களில் இது 7 நாட்கள் வரையும் ஆகலாம். அதே நேரத்தில், ஆஃப்லைன் கோரிக்கைகள் 10–20 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
April 06, 2025 2:42 PM IST

