Last Updated:
இந்த டிஜிட்டல் மாற்றம், பிஎஃப் பணம் எடுப்பதில் இருக்கும் நீண்ட கால தாமதங்கள் மற்றும் அலைச்சல்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், 2025-26 நிதியாண்டிற்கான (FY26) இபிஎஃப் (EPF) வைப்புத்தொகைக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்க மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான இபிஎஃப்ஓ-வின் உச்சபட்ச முடிவெடுக்கும் அமைப்பான CBT, கடந்த மார்ச் 2, 2026 அன்று இந்த வட்டி விகிதத்தை பரிந்துரைத்திருந்தது.
தற்போது நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் காட்டியுள்ளதைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் நாட்டின் 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டிப் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஃப்ஓ தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதே 8.25% வட்டி விகிதத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் இந்த வட்டி விகிதம் மாற்றமில்லாமல் வழங்கப்படுவது நடுத்தர வர்க்க ஊழியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இபிஎஃப் வைப்புத்தொகைகளுக்கு மத்திய அரசு உத்தரவாதமளிப்பதால், நிதி அமைச்சகத்தின் இந்த ஒப்புதல் முறைப்படியான இறுதி கட்ட நடவடிக்கையாகும். இந்த வட்டி வரவு வைக்கும் செயல்முறையுடன் சேர்த்து, இபிஎஃப்ஓ தனது ‘இபிஎஃப்ஓ 3.0’ (EPFO 3.0) என்ற அடுத்த தலைமுறை டிஜிட்டல் சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் வசதிக்காக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து ஒரு புதிய தொழில்நுட்ப வசதி சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்களின் பிஎஃப் (PF) சேமிப்புப் பணத்தை யுபிஐ (UPI) செயலிகள் மற்றும் இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட ஏடிஎம் (ATM) நெட்வொர்க்குகள் வழியாக நேரடியாகவும் உடனடியாகவும் திரும்பப் பெற முடியும்.
இந்த புதிய நடைமுறையின் கீழ், உறுப்பினர்கள் தங்களது இபிஎஃப் இருப்பில் (EPF Balance) இருந்து 75 சதவீதம் வரையிலான தொகையை எவ்வித ஆவணப் பணிகளும் இன்றி, உடனடியாகத் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றம், பிஎஃப் பணம் எடுப்பதில் இருக்கும் நீண்ட கால தாமதங்கள் மற்றும் அலைச்சல்களை முற்றிலுமாக ஒழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இடைத்தரகர்கள் இல்லாத வெளிப்படைத்தன்மையையும், கணக்குவழக்குகளில் நம்பகத்தன்மையையும் இது பெருமளவில் அதிகரிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன், யுஏஎன் (UAN) எண்ணை ஆக்டிவேட் செய்ய இனி ஓடிபி தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக முக அங்கீகார வசதி கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இந்த புதிய அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்: 8.25% வட்டிக்கு மத்திய அரசு ஒப்புதல்; இந்த மாதமே வட்டி பணம் வரவு!


