CPGRAMS என்பது மத்திய மற்றும் மாநில அரசு துறைகளுக்கு எதிராக குடிமக்களை புகார்கள் சமர்ப்பிக்க, அவற்றின் நிலையைக் கண்காணிக்க, தேவையெனில் மேல்முறையீடு செய்ய உதவும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும். இது அரசின் சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் உயர்த்தி, பொதுமக்களின் குறைகள் விரைவாக தீர்க்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை pgportal.gov.in என்கிற இணையதளம் வாயிலாக அணுகலாம். அதோடு, உமாங் மொபைல் செயலி மற்றும் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவும் பயன்படுத்த முடியும்.
எந்த மாதிரியான நிதி குறைகளுக்கு CPGRAMS உதவும்?
பிஎஃப் திரும்பப் பெறுதல் அல்லது பண பரிமாற்றங்களில் தாமதம் / நிலுவை: பணியாளர் வருங்கால வைப்பு நிதியை (Provident Fund) திரும்பப் பெறுதல் அல்லது அதை ஒரு கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் செயல்முறையில் தாமதம் ஏற்படுவது பொதுவான குறையாகும். சில நேரங்களில் தொகை தவறாகப் பதிவு செய்யப்படுவது அல்லது செயல்முறை பல வாரங்கள் எடுப்பதும் பிரச்சனையாக இருக்கும்.
ஓய்வூதிய தொகையில் கணக்கீட்டுப் பிழைகள்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் கணக்கீட்டு தவறுகள் ஏற்படலாம். உதாரணமாக, காணாமற்போன நிலுவைத் தொகைகள், தவறான தொகை நிர்ணயம் அல்லது வங்கிக் கணக்கில் சரியான நேரத்தில் வரவு வைக்கப்படாதது போன்றவை அடங்கும்.
வருமான வரி பெறுவதில் சிக்கல்கள்: சில வரி செலுத்துவோர் தங்களது வருமான வரியை திரும்பப் பெறுதலில் தாமதங்கள், தவறான தொகை வழங்கல் அல்லது பெற வேண்டிய தொகை முற்றிலும் கிடைக்காதது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற நிலைகளில், CPGRAMS மூலம் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கலாம்.
பொதுத்துறை வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்களுடனான பிரச்சனைகள்: வங்கிக் கணக்கில் உள்ள தொகைகள், கடன் அல்லது காப்பீட்டு உரிமை கோரல் தொடர்பான தீர்வுகளில் தாமதங்கள், தவறான கணக்கீடுகள் அல்லது உரிய நடவடிக்கை எடுக்காத நிலைகள் போன்றவையும் இதன் கீழ்வரும்.
இந்தப் பிரச்சனைகள் ஓய்வூதியர்கள், சம்பள ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு மிக நேர்த்தியான பாதிப்பை ஏற்படுத்தலாம். CPGRAMS அவற்றை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அழையாமல் டிஜிட்டல் வழியில் சீரமைக்க உதவுகிறது.
CPGRAMS-ல் புகார் அளிப்பது எப்படி? படிப்படியான வழிகாட்டி…
1. போர்டல்/ஆப்பை திறக்கவும்: pgportal.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “File Public Grievance” அல்லது உமாங் செயலியில் CPGRAMS என்பதை தேர்வு செய்யவும்.
2. துறையை தேர்வு செய்யவும்: என்ன பிரச்சனையோ, அது சம்பந்தப்பட்ட மத்திய/மாநில அல்லது அமைச்சகம்/துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. புகார் படிவம் நிரப்புதல்: சம்பந்தப்பட்ட விவரங்கள் (பெயர், தொடர்பு எண், முகவரி), பிரச்சனையின் சுருக்கம் மற்றும் புகார் குறித்து விரிவான விளக்கம் கொடுக்க வேண்டும்.
4. ஆவணங்களை இணைக்கவும்: ஆதாரமாக உள்ள ஆவணங்கள் (பிஎஃப் அறிக்கைகள், பில்கள், வரி அறிக்கைகள் போன்றவை) இருந்தால் அதை பதிவேற்ற வேண்டும்.
5. சமர்ப்பிக்கவும் & ரிஜிஸ்டர் ஐடி சேமிக்கவும்: உங்களது புகார் சமர்ப்பிக்கப்பட்டதும், பதிவு செய்யப்பட்டதற்கான தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். அதை பயன்படுத்தி பின்னாளில் நிலையை அறிந்து கொள்ளலாம்.
6. நிலையை கண்காணிக்கவும்: ஆன்லைனில் வழங்கப்படும் தீர்வுகள் குறித்து, CPGRAMS தளத்தில் அந்த தீர்வை பற்றி கருத்து தெரிவிக்கலாம். தீர்வில் திருப்தி இல்லையெனில் அதே பதிவு ஐடியை மீண்டும் மேல்முறையீட்டுக்கு பயன்படுத்தலாம்.
7. முடிந்த பின்னர் கருத்து தெரிவித்தல்: தீர்வு வழங்கப்பட்ட பின்னர் பயனர் அவரது சொந்த கருத்து பகிரலாம்.
CPGRAMS கையாள முடியாதவை (Limitations)
- நீதிமன்றத்தில் நடைமுறைப் பிரச்சனைகள் அல்லது வழக்குகள் இருந்தால் அதற்கு இந்த வசதி பொருந்தாது.
- RTI தொடர்பான விவாதங்களுக்கு இதில் புகார் அளிக்க முடியாது.
- மதம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சில துறைசார்ந்த சேவைகளுக்கு இதனை பயன்படுத்த முடியாது.
இந்த வகையான பிரச்சனைகள் பொதுவாக நீதிமன்ற நடைமுறைகள் அல்லது தனிப்பட்ட விதிமுறைகளின்கீழ் தீர்க்கப்பட வேண்டியவையாகும்.
வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்தில், அரசு சேவைகளில் உள்ள குறைகளை எளிதாக புகார் செய்யவும், கண்காணிக்கவும் ஏதுவான நம்பகமான வழி இருக்க வேண்டும். CPGRAMS மூலமாக பதிவு செய்யப்படும் குறை சரியான அதிகாரிக்கு நேரடியாக சென்றடைவதை உறுதி செய்யும் அதேவேளையில், பொதுமக்களின் குறைகள் தாமதமின்றி தீர்க்கப்படுவதற்கான கண்காணிப்பு வசதியையும் வழங்குகிறது. இது ஓய்வூதிய திருத்தத்திற்காக காத்திருக்கும் முதியோருக்கும், வரி திரும்பப் பெறுவதில் தாமதத்தை சந்திக்கும் நபர்களுக்கும் ஒரு பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த கருவியாக திகழ்கிறது.
October 24, 2025 8:06 PM IST
பிஎஃப், ஓய்வூதியம் அல்லது வரியை திரும்பப் பெறுவதில் தாமதமா…? குறைகளைத் தீர்க்க அரசின் புதிய வசதி…

