முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து, அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதேபோல், பிரஜ்வல் ரேவண்ணாவும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவருகிறார்.
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகர்ப்பில் ஈடுபட்டார். ஆனால், வாக்குப் பதிவுக்கு முந்தைய தினத்தன்று அவர் தொடர்பான பல பாலியல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
அதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து வெளியேறினார். மேலும், கர்நாடகா அரசு அவர் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பி விசாரணையை எதிர்கொள்ள அவரது தாத்தா தேவகௌடா கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்பினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து சிறப்பு விசாரணை குழு கைது செய்து விசாரணையையும் தீவிரப்படுத்தியது.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு சிறப்பு விசாரணை குழு, பிரஜ்வல் ரேவண்ணா மீது ஆகஸ்ட் மாதம் 2,144 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதனையடுத்து அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம் அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள் :
“என்னை அழைத்தால் நான் செல்வேன்” – எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்!
அதனைத் தொடர்ந்து அவர், தனக்கு ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று நீதிபதிகள், பேலா எம் திரிவேதி மற்றும் சத்திஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, பிரஜ்வல் ரேவண்ணா மிகவும் செல்வாக்கு மிக்க நபர் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ஜாமீன் மறுத்த கர்நாடகா உயர் நீதிமன்றத் தீர்ப்பிலும் தலையிட முடியாது எனத் தெரிவித்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
