லண்டன்:
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் சர்ச்சையில் பெயர் தொடர்புடைய பிரிட்டனின் மன்னர் சார்ல்ஸின் தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரசுப் பட்டங்களும் அதிகாரப்பூர்வமாக பறிக்கப்பட்டுள்ளன.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் ஆண்ட்ரூ இனிமேல் “ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்” (Andrew Mountbatten-Windsor) என அழைக்கப்படுவார் என்றும், அவர் வின்சர் அரண்மனையை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை, ஜெஃப்ரி எப்ஸ்டீனின் முக்கிய குற்றஞ்சாட்டுபவர்களில் ஒருவரான வர்ஜினியா ஜுஃப்ரே தனது நினைவுக் குறிப்புகளில், ஆண்ட்ரூவுடன் சட்டவிரோத பாலியல் உறவு வைத்ததாக கூறியதையடுத்து எடுக்கப்பட்டது.
இளவரசர் ஆண்ட்ரூ, தன்ன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்தாலும், பொதுமக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, மன்னர் சார்ல்ஸ் இந்த முடிவை எடுத்ததாக அரண்மனை தெரிவித்தது.
“எந்தவிதமான துன்புறுத்தலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறார்,”
என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை குறிப்பிட்டது.
அரசாங்கத்தின் ஆலோசனையைப் பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆண்ட்ரூ எந்தவித எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பாலியல் வன்செயல் குற்றச்சாட்டு: இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து பட்டங்களும் பறிப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

