மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சித்தி காசிம், பார்ட்டி பங்சா மலேசியா (PBM) கட்சியில் இணைந்துள்ளதன் மூலம் தனது அரசியல் பயணத்தில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையாமல் இருந்துவந்த அவர், நீதியான, சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மலேசியாவை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தி காசிம், “இதுவரை நான் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்ததில்லை; அதிகாரத்தில் யார் இருந்தாலும் நீதிக்காக சுயேச்சையாகப் பேசுவதும், எனது மனசாட்சிக்கு ஏற்பச் செயல்படுவதுமே எனக்கு முதன்மையானது. எனது இந்தச் சுதந்திரமான கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதாக PBM தலைமைத்துவம் உறுதியளித்துள்ளதால் மட்டுமே இக்கட்சியில் இணையச் சம்மதித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சி அரசியலில் இணைந்ததற்காகத் தனது கொள்கைகளையோ அல்லது குரலையோ விட்டுக் கொடுக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், ஓராங் அஸ்லி பழங்குடியினரின் உரிமைகள், அரசியலமைப்புச் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார். “எனது தளம் மாறியிருக்கலாம், ஆனால் எனது கொள்கைகள் மாறாது; ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, தவறு நடந்தால் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டேன்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.



