Last Updated:
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது ஏன் என்பதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். உடல், மனரீதியாக கஷ்டம், குடும்பத்துடன் நேரம் செலவிடாதது காரணம்.
ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது ஏன் என்பதற்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் ரவிச்சந்திரன் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலகில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் அஸ்வின்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். தொடரின் பாதியிலேயே அஸ்வின் ஓய்வு அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதனால் தான் ஓய்வு முடிவை எடுத்தார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், பார்டர் – கவாஸ்கர் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே ஓய்வு அறிவித்தது ஏன் என்பதற்கு அஸ்வின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், சி.எஸ்.கே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸியின் ‘மைக் டெஸ்டிங் 123’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் பேசுகையில், “எனது 100வது டெஸ்ட் போட்டியின்போதே ஓய்வு முடிவை எடுத்துவிட்டேன். உண்மை அதுதான். அப்போதே ஓய்வை அறிவிக்க விரும்பினேன். ஆனால் அதன்பிறகு இந்தியாவில் கிரிக்கெட் தொடர் நடக்கவிருந்ததால் சொந்த மண்ணில் ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என இருந்தேன்.
அந்த தருணங்களில் ஆடுகளத்தில் மீண்டும் விளையாட எனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கஷ்டமாக இருந்தது. மேலும் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடவில்லை. இது எனக்கு மனச்சோர்வை தந்தது. எனவே, இந்தியாவில் குறிப்பாக சொந்த மண்ணான சென்னை டெஸ்ட் போட்டியில் எனது முடிவை சொல்லலாம் என நினைத்தேன்.
ஆனால், சென்னை டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட் எடுத்ததோடு ஒரு சதம் அடித்தேன். நன்றாக விளையாடும்போது முடிவை சொல்வது கடினம். எனவே ஆஸ்திரேலிய தொடர் வரை பார்ப்போம் என முடிவை மாற்றினேன். ஏனென்றால் கடந்த ஆஸ்திரேலிய தொடர் எனக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் பெர்த்தில் விளையாடவில்லை என்றதும் ஒருவேளை இது சரியான நேரமாக இருக்கலாம் எனக் கருதி இறுதியில் ஓய்வு முடிவை சொன்னேன்” என்று மனம் திறந்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 30, 2025 8:19 AM IST


