Last Updated:
Neeraj Yadav | உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நீரஜ் யாதவ் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தனது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ், தனது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்திய பாரா-தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா, நீரஜ் யாதவ்வின் மரண சம்பவத்தை உறுதிப்படுத்தினார். “இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றும் அவர் கூறினார்.
“நீரஜ் தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஊக்கமருந்து விவகாரத்தில் அவர் பெயர் அடிபட்ட பிறகு நான் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தேன்” என்று பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா தெரிவித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நீரஜ் யாதவ் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2018-ல் ஜகார்த்தாவில் தங்கப் பதக்கம் வென்ற அவர், அதனைத் தொடர்ந்து 2023-ல் ஹாங்சூவில் நடைபெற்ற போட்டிகளில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.
42 வயதான நீரஜ் யாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால், இந்த மாத தொடக்கத்தில் ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இது அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது. அவரது மரணத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உடற்கூராய்வு நடந்து வரும் நிலையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஏழு வயதில் போலியோ பாதிப்பால் உடல் ஊனம் அடைந்த நீரஜ் யாதவ், முதலில் சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினார். பின்னர் பாரா-தடகளப் போட்டிக்கு மாறிய அவர், சர்வதேச அரங்கில் தனது முத்திரையைப் பதித்தார். அவர் F55 பிரிவில் போட்டியிட்டு, இந்தப் பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகியவற்றில் கலந்துகொண்டார்.


