கோலாலம்பூர்:
கேடிஎம் (KTMB) நிறுவனத்தின் பொறியியல் திட்ட ரயில் தடம் புரண்டதன் காரணமாக, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாத்தாங் பெனார் ரயில் நிலையத்தில் இன்று மதியம் ஒரு பொறியியல் திட்ட ரயில் (Engineering Train) தடம் புரண்டது.
இதனால் பத்துமலை (Batu Caves) மற்றும் பூலாவ் செபாங்/தம்பின் (Pulau Sebang/Tampin) இடையிலான இருதரப்பு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீரமைப்புப் பணிகள் நடப்பதால், ரயில்கள் தற்காலிகமாக பாத்தாங் பெனார் நிலையத்தில் நிறுத்தப்படாது.
பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள்
ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தடையை ஈடுகட்ட கேடிஎம்பி (KTMB) நிறுவனம் மாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே பாத்தாங் பெனார் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அல்லது அங்கிருந்து பயணம் செய்ய வேண்டிய பயணிகளுக்காக நீலாய் (Nilai) – பாங்கி (Bangi) நிலையங்களுக்கு இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேநேரம் பயணிகளுக்கு வழிகாட்ட அந்தந்த ரயில் நிலையங்களில் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள கேடிஎம்பியின் தொழில்நுட்பக் குழுவினர், தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரிசெய்த பின்னரே முழுமையான ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




