Last Updated:
ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வர மறுக்கும் வங்கதேச அணிக்கு முன்னாள் வீரரும் தெலுங்கானா அமைச்சருமான முகமது அசாருதீன் பதிலடி கொடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து அந்த நாட்டைச் சேர்ந்த பவுலர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் அணி தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் வங்கதேச அணி தனது முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது.
இதையடுத்து அந்த அணிக்கும் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும் என்றும், அந்த அணிக்கு மாற்று அணியாக ஸ்காட்லாந்து போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் வங்கதேச அணி T20 தொடரில் பங்கேற்காதது குறித்து முன்னாள் கேப்டனும் தெலுங்கானா அமைச்சருமான முகமது அசாருதீன் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணி விளையாடி இருக்கிறது. இந்தியாவுக்கு வந்து விளையாடும் எந்த ஒரு வெளிநாட்டு அணியும் பாதுகாப்பு குறித்து இதுவரை புகார் அளிக்கவில்லை.
இந்த சூழலில் வங்கதேசம் மட்டும் இந்தியாவுக்கு வந்து விளையாட ஏன் மறுப்பு தெரிவிக்கிறது? இதனால் வங்கதேச அணிக்கும், அந்நாட்டு வீரர்களுக்கும் தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரை தவிர்ப்பதால் அணிக்கும் வீரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது என்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.


