சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் பலியான 3 நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 3 நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் ரூ. 25 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சலான சுதிர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மற்ற மூவரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியிலிருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் பலியாகும் நக்சல்களின் உடல்கள் மீட்கப்படுவது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

