துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
ராகம, படுவத்த – வல்பொல வீதியின் வீரரத்ன மாவத்தையில் மரமொன்றின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கி, T-56 ரக தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை செலுத்தக்கூடிய வகையில் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு
விசாரணைகளில் மேலும் தெரியவருகையில், பாதாள உலகக் குழு உறுப்பினரின் உத்தரவின் பேரில் ஒருவரை கொலை செய்வதற்காக அவரது தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் வருகை தரும் வரை, குறித்த துப்பாக்கி மரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் துப்பாக்கிதாரி வருகை தந்து ஆயுதத்தை எடுத்துச் செல்லவிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக உயர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

