பாடாங் தெராப், 21 மார்ச் 2026:
மலேசியாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கெடா மாநிலத்தின் பாடாங் தெராப் (Padang Terap) பகுதியில் இரண்டாம் நிலை (Level 2) வெப்ப அலை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) விடுத்துள்ளது.
இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37°C முதல் 40°C வரை பதிவாகியுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபகற்ப மலேசியாவின் மேலும் 10 பகுதிகளில் முதலாம் நிலை (Level 1) வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வெப்பநிலை 35°C முதல் 37°C வரை பதிவாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில், பெர்லிஸ் (Perlis): மாநிலம் முழுவதும், கெடா (Kedah): குபாங் பாசு, போக்கோ சேனா, சிக், லங்காவி தீவு, கோலா மூடா, பெண்டாங், பாலிங் மற்றும் பண்டார் பாரு மற்றும் பினாங்கு (Penang): வடகிழக்கு மாவட்டம் (Northeast district) ஆகியவை அடங்கும்.
பொதுமக்கள் தற்போதைய வெப்பநிலைப் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், கூடுதல் தகவல்களைப் பெறவும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




