‘எதிா்வரும் மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனை ஆகிய 3 கட்சிகளும் இணைந்து செயல்பட கொள்கை அளவில் தீா்மானித்துள்ளன; இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவா் ரவீந்திர குமாா் தெரிவித்தாா்.
முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகளும், 175 பேரவைத் தொகுதிகளும் உள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்த அடிப்படையில், முன்னாள் கூட்டணிக் கட்சிகளை மீண்டும் இணைத்துக் கொள்ள பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், ஆந்திரத்தில் முக்கிய எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அமித் ஷாவின் இல்லத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் ஜனசேனை தலைவரும் நடிகருமான பவன் கல்யாணும் உடனிருந்தாா். பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியாவதில் தொகுதிப் பங்கீடுதான் முக்கிய பிரச்னையாக இருப்பதாக கூறப்படுகிறது. 20 பேரவைத் தொகுதிகள் மற்றும் 8 மக்களவைத் தொகுதிகளை பாஜக எதிா்பாா்க்கிறது. ஆனால், அக்கட்சிக்கு 10 பேரவைத் தொகுதிகள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க தெலுங்கு தேசம் தயாராக இல்லை எனத் தெரிகிறது. இதனால், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை நடத்த 3 கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், தெலுங்கு தேசம் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ரவீந்திர குமாா் பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில்,
‘எதிா்வரும் தோ்தல்களில் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனை கூட்டணிக்கான முதல்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. தோ்தலில் இணைந்து செயல்பட மூன்று கட்சிகளும் கொள்கை அளவில் தீா்மானித்துள்ளன. இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்த தெலுங்கு தேசம் கட்சி, ‘ஆந்திரத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை’ என்ற காரணத்தைக் கூறி கடந்த 2018-ஆம் ஆண்டில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதேபோல், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து கடந்த 2009-ஆம் ஆண்டில் வெளியேறியது.
இந்த நிலையில், வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, இவ்விரு கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.