Last Updated:
காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, பாஜகவில் இணைந்து தற்போது பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுவது பெரும் கவனம் பெற்றுள்ளது.
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மூணாறில், உள்ளாட்சித் தேர்தலில், பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் சோனியா காந்தி என்பவர் போட்டியிடுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூணாறு நல்லதண்ணி கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த காங்கிரஸ் நிர்வாகி துரே ராஜ். தமிழரான இவர் நேரு குடும்பத்தின் மீது இருந்த பற்றால், தனது மகளுக்கு சோனியா காந்தி என பெயரிட்டார்.
காங்கிரஸ்காரரின் மகளாக வளர்ந்த வழக்கறிஞரான சோனியா காந்தி, பாஜக நிர்வாகியான சுபாஷை திருமணம் செய்து கொண்டார். பாஜகவிற்காக தீவிரமாக பணியாற்றி வரும் சுபாஷ், மூணாறு மூலக்கடை ஊராட்சியில் ஏற்கனவே பாஜக சார்பில் போட்டியிட்டவர்.

இவரை திருமணம் செய்த பின்னர் பாஜகவில் இணைந்த சோனியா காந்தி, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில், தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், மூணாறு ஊராட்சியில் 34 வயதான சோனியா காந்திக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி என்ற பெயரில், ஒருவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் களமிறங்குவது கேரளாவில் பேசுபொருளாகியுள்ளது. இதனால், பாஜக வேட்பாளர் சோனியா காந்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால், மூணாறு ஊராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சுளா ரமேஷ் அதிர்ந்துபோயுள்ளார்.
December 02, 2025 9:25 PM IST


