Last Updated:
பாஜக தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 17-ம் தேதி முக்கியக் கூட்டம் நடக்கிறது. ஜெ.பி.நட்டா தலைமையில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், அங்கு யார் முதல்வர்? எப்போது புது அரசு பதவியேற்கும் எனும் விவரம் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
டெல்லி சட்டமன்றத்திற்கு கடந்த 5-ம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
70 தொகுதிகளில் 48 தொகுதிகளை வென்ற பாஜக கடந்த 27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த இருமுறையாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது. குறிப்பாக ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தனர்.
இதையும் படியுங்கள் : ஆம் ஆத்மி தலைவரின் மனைவி கொடூரக் கொலை… போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வந்து இன்றோடு எட்டு நாட்கள் கடந்தும் அங்கு எப்போது புது அரசு பதவியேற்கும், யார் முதல்வர் என்பது இன்னும் முடிவாகாமல் இருக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக டெல்லி எம்.எல்.ஏ.வும், தேசிய செயலாளருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா, “பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார். விரைவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டத்திற்கான பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். புது அரசு பிப்ரவரி 19 அல்லது 20-ம் தேதியில் இருந்து செயல்படும். முதல்வர் பதவிக்கு இங்கு எந்தப் போட்டியும் இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவரும், முதல்வரும் யார் என்பது தேர்வு செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில் நாளை பிப்ரவரி 17-ம் தேதி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கியக் கூட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தை கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமை தாங்குகிறார். மாலை 3 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர்கள் பங்கேற்பதாகவும், இதில் டெல்லி முதல்வர் யார் என்பது முடிவு எடுத்து இறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
February 16, 2025 7:02 PM IST


