Last Updated:
பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி பராஸ் விலகியுள்ளார். இது என்டிஏவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பசுபதி பராஸ் அறிவித்துள்ளார்.
விரைவில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பசுபதி பராசின் இந்த திடீர் அறிவிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரான பசுபதி பராஸ், தனது அண்ணன் மறைவுக்கு பிறகு லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து விலகி கடந்த 2022ஆம் ஆண்டு ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கினார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பசுபதி பராஸ் ஆதரவு அளித்து வந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் போட்டியிட்டு வந்த ஹாஜிபூர் தொகுதியை அவரது அண்ணன் மகனான சிராஜ் பஸ்வானுக்கு பாஜக ஒதுக்கியது.
இந்நிலையில், பட்டியலின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளும் கூட்டணி அரசு தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உள்ள பசுபதி பராஸ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதுநாள் வரை வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், கொள்கை ஒத்துப்போனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்தாலும், தனது கட்சியின் பெயரை கூட்டணி தலைவர்கள் எங்கும் குறிப்பிட மறுப்பதாகவும் குற்றம்சாட்டிய பசுபதி பராஸ், தலித் கட்சியாக இருப்பதால் தனது கட்சி நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதுவே கூட்டணியில் இருந்து பிரியும் முடிவை எடுக்க தன்னைத் தூண்டியதாகவும் தெரிவித்தார்.
2014 முதல் என்டிஏ கூட்டணியில் விசுவாசமான கூட்டாளியாக இருந்தாலும், மக்களவை தேர்தலின்போது எங்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டது என்றும், எனினும், தேசிய நலனுக்காக கூட்டணியை ஆதரித்தோம் என்றும் பசுபதி பராஸ் வருத்தம் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 15, 2025 7:32 AM IST


