Last Updated:
பாகிஸ்தானின் சமீபத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல் மசூதியின் கூரைக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் இறந்ததையடுத்து, இதற்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை களைய திடீர் ராணுவ தாக்குதலை தொடங்கியது இந்தியா.
ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளின் இடங்களை துல்லியமாக தாக்கியது இந்திய ராணுவம். பாகிஸ்தான் நாட்டிற்குள்ளோ அல்லது ராணுவ பகுதிகளையோ இந்திய ராணுவம் தாக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானும் தன் பங்கிற்கு இந்திய தாக்குதலை முறியடிக்க ட்ரோன், ஏவுகனை போன்றவற்றை வீசியது. இதை வெற்றிகரமாக இந்தியப் படைகள் முறியடித்த போதிலும், சில ஷெல் குண்டுகள் காஷ்மீரின் எல்லைக்கோட்டிற்கு அருகில் இருக்கும் கிராமங்களை வெகுவாக பாதித்துள்ளன.
குறிப்பாக பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் காஷ்மீரில் உள்ள மசூதி ஒன்று சேதமடைந்ததை அடுத்து, ஜம்முவில் உள்ள சோட்டா காவ்ன் மொஹல்லா மற்றும் காஷ்மீரின் இப்கோட் கிராம மக்களுக்கு இந்திய ராணுவம் சரியான நேரத்தில் உதவி செய்துள்ளது. பாகிஸ்தானின் சமீபத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல் மசூதியின் கூரைக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இரும்பு தகர கொட்டகைகள், அத்துடன் சூரிய தகடு அமைப்பு மற்றும் பிரார்த்தனை அறைக்குள் உள்ள மேட்டிங் போன்றவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இந்த சம்பவம் உள்ளூர் சமூகத்து மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குறிப்பாக அங்கு வசிக்கு மக்களுக்கு இந்த மசூதி தான் மைய வழிபாட்டுத் தலமாகவும், ஊர் மக்கள் ஒன்றாக கூடும் இடமாகவும் இருந்து வந்தது. இதை உணர்ந்த இந்திய இராணுவம், மசூதியை பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டது. கூரையை சரிசெய்து, சூரிய சக்தி அமைப்பை மீட்டெடுத்ததோடு மட்டுமின்றி சேதமடைந்த மேட்டிங்கை மாற்றியது. தற்போது உள்ளூர் மக்கள் மசூதியை மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் உள்ள சமூகங்களை ஆதரிப்பதற்கான இந்திய இராணுவத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டது. இப்கோட் குடியிருப்பாளர்கள் இராணுவத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் இராணுவத்தின் பங்கை சமூக உறுப்பினர்கள் பாராட்டினர்.
இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் இருந்து வந்த நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இரு நாட்டுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனது மத்தியஸ்தமே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பினர் யாரும் பங்கெடுக்கவில்லை என உறுதியாக கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செயலர்.


