Last Updated:
இம்ரான் கான் ராவல்பிண்டி அடியாலா சிறையில் உயிருடன் நலமுடன் இருப்பதாக அவரது சகோதரி உஸ்மா தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிரோடு இருக்கிறாரா என்பது பற்றி பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனரான இம்ரான்கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு, 2023 ஆம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு கடந்த சில வாரங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், சிறைக்குள் அவரை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், அக்கட்சி தொண்டர்கள் சிறை வளாகத்துக்கு முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே அடியாலா சிறைக்குள் இம்ரான்கானின் சகோதரி உஸ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு இம்ரான்கானை அவர் சந்தித்தாக கூறப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள உஸ்மா, இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார் என்றும், அதே சமயம் அவரை மனரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறியதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறையில் இம்ரான்கான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தான் கொல்லப்படக் கூடும் என இம்ரான் அஞ்சுவதாகவும் உஸ்மா தெரிவித்துள்ளார். அசீம் முனிர் புத்தி பேதலித்தவர் என்றும் பாகிஸ்தான் வரலாற்றில் மிகவும் கொடுங்கோலன் அவர்தான் என்றும் தனது சகோதரர் இம்ரான்கான் தன்னிடம் கூறியதாகவும் உஸ்மா தெரிவித்துள்ளார்.
December 03, 2025 11:48 AM IST


