Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என முப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவந்த கடுமையான மோதல், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால், சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை செய்ததாக முதலில் அறிவித்தார். அதன் பிறகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாட்டு எல்லை பகுதிகளிலும் அமைதி திரும்பி வருகிறது. இரவில் சில அத்துமீறல்கள் இருந்தாலும் பெரிதாக சண்டை நடக்கவில்லை. இதனால் 3 நாள் சண்டை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் நகரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 7:30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று, ஆபரேஷன் சிந்துர் குறித்து முப்படை அதிகாரிகள் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “பயங்கரவாத கட்டமைப்புகளைத் தகர்க்கவே ஆபரேஷன் சிந்துர் நடத்தப்பட்டது. ஒன்பது பயங்கரவாதி முகாம்கள் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டது. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
அதன் மூலம், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவூப், முடாசிர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்ட ரவூப் அசாரை நாங்கள் ஒழித்துவிட்டோம். குருத்வாரா, கோயில்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் பலியாகியுள்ளனர். எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை.
பாகிஸ்தானின் F16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா விமான தளத்தை வெற்றிகரமாக தாக்கினோம். நூர்கான் விமான தளத்தையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாகத் தாக்கியது. பாகிஸ்தானின் சக்கரில் உள்ள ரேடார் மையத்தையும் வெற்றிகரமாக அழித்துள்ளோம். ஜகோபாபாத் விமான தளத்தையும் இந்திய ராணுவம் தாக்கியது.
இந்தியா நடத்திய தாக்குதலில் 35 பாகிஸ்தான் ராணுவத்தினர் மரணம். பாகிஸ்தான் அவசரமாக தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக தொடர்பு கொண்டது. மே 10ஆம் தேதி காலை என்னை (இந்திய டிஜிஎம்ஓ) பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொடர்பு கொண்டார். நேற்று மாலை 3.35 மணிக்கு இருநாட்டு டிஜிஎம்ஓக்களும் பேசினோம். பாகிஸ்தான் இன்று மீண்டும் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும்” எனத் தெரிவித்தனர்.


