Last Updated:
கேப்டன் பயிற்சியாளரும் சேர்ந்து அணியை தேர்வு செய்த விதம் தோல்விக்கு வழி வகுத்து விட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் நடைபெற்ற 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இது குறித்து அந்த அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 நாட்டு அணிகள் பங்கேற்ற இந்த போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது சூப்பர் 4 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதன் முதல் போட்டியில் இலங்கையை வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியாவும் வென்ற நிலையில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவுடன் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “என்னை பொறுத்த அளவில் அணி தேர்வு முறையே தவறாக உள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை எடுத்திருக்க வேண்டும். முதல் பத்து ஓவர்களிலேயே 91 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் அணியில் கேப்டன் தான் மிகவும் பலவீனமாக இருக்கிறார். கேப்டன் பயிற்சியாளரும் சேர்ந்து அணியை தேர்வு செய்த விதம் தோல்விக்கு வழி வகுத்து விட்டது. எனவே, இந்த தோல்விக்கு கேப்டன் பயிற்சியாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். சல்மான் அகா எதற்காக கேப்டனாக இருக்கிறார்? தான் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு தெரியவில்லை. மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர் பாகிஸ்தான் அணிக்கு பலவீனத்தையே ஏற்படுத்துகிறார்” என்று கூறியுள்ளார்.
September 23, 2025 4:52 PM IST


