பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், ஆட்டநாயகன் பும்ரா குறித்து, கேப்டன் ரோகித் சர்மா கூறிய வார்த்தை, சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று, நியூயார்க்கில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தொடக்க வீரர் விராட் கோலி வெறும் 4 ரன்களில் அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தான், சற்று பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரிஷப் பந்த் 42 ரன்களிலும், அக்ஷர் படேல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், 19 ஓவரிலேயே இந்திய அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், பாகிஸ்தான் எளிதில் வெற்றிபெறும் என ரசிகர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டனர்.
இதையும் படிக்க:
பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி..
அதற்கு தகுந்தாற்போலவே, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான மொகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோர் வந்தவுடன் அதிரடியாக விளையாடினர். இருப்பினும், 5வது ஓவரை வீசிய பும்ரா, பாபர் ஆசமை வீழ்த்தினார். ஆனாலும், பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாடியதால், 10வது ஓவர் வரை 2வது விக்கெட் விழவில்லை. இதையடுத்து, 11வது ஓவரை வீசிய அக்ஷர் படேல், உஸ்மான் கானை வீழ்த்தினார். அப்போது வரை, பாகிஸ்தான் வெல்லும் என்றே ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ஆனால், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோரின் பந்து வீச்சுகளில் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்து வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே இமாத் வாசிமை வெளியேற்றினார். இருப்பினும் அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. ஆனாலும், வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து பேட்டியளித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும், 119 ரன்களுக்கு ஆல் அவுட்டான நம்மால், பாகிஸ்தானை அதற்குள்ளாகவே சுருட்ட முடியும் என்று கூறினேன். இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். கடந்த போட்டியை விட, இந்த பிட்ச் உண்மையாகவே நன்றாக இருந்தது. அதில், தன்னம்பிக்கை கொண்ட எங்களது பவுலிங் வரிசை சிறப்பாக செயல்பட்டதால் வெற்றிபெற்றோம்” என்று ரோகித் சர்மா கூறினார்.
மேலும், பும்ரா தனது பலத்தை வைத்து, தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவரைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும், அவர் இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவர் ஜீனியஸ். ரசிகர்களும் நாங்கள் விளையாடும்போதெல்லாம், எங்களை ஏமாற்றுவதில்லை. இது ஆரம்பம் மட்டுமே, இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
