Last Updated:
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகையில் உறுதியான ஆதாரங்கள் உள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக, அவருக்கு எதிரான 2,500 பக்க குற்றப்பத்திரிகையில் சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. பெண் யூடியூபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள அதிரடி குற்றச்சாட்டுகள் என்ன? என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
டிராவல் ‘வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் பிரபல சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று அந்த இடம் குறித்த தகவல்களை தனது யூடியூப் வீடியோ மூலம் வெளியிட்டு பிரபலமடைந்தார். இவர் மீது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த மே 16 ஆம் தேதி ஹரியானா போலீசார் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ராவை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு எதிரான ஏராளமான ஆதாரங்கள் சிக்கின. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்த எஹ்சான்-உர்-ரஹீம் டேனிஷ் அலியுடன் ஜோதி பல முறை பேசியுள்ளது இதன் மூலம் கண்டறியப்பட்டது. அதன்பின் ரஹீம் 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும், பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் மார்க்கெட் பகுதிகளில், ஜோதி மல்ஹோத்ரா வலம் வந்த வீடியோ காட்சிகளும் ஆதாரங்ளாக சிக்கின.
இந்நிலையில் ஹரியானாவின் ஹிசார் நீதிமன்றத்தில் சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக சிறப்பு விசாரணைக் குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஜோதி நீண்ட காலமாக பாகிஸ்தான் முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்தியா குறித்த முக்கியமான தகவல்களை அவர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்ததாகவும், போலீசார் தங்கள் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றப்பத்திரிகையில் ரஹீமுடனான அவரது தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஐஎஸ்ஐ முகவர்கள் ஷாகிர், ஹசன் அலி மற்றும் நாசர் தில்லான் ஆகியோருடனும் அவர் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பாகிஸ்தானுக்குச் சென்று மே 15 ஆம் தேதி இந்தியா திரும்பியது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, கர்தார்பூர் வழித்தடம் வழியாக மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்குச் சென்று, அங்கு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப்பைச் சந்தித்து பேட்டி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 18, 2025 3:36 PM IST


