Last Updated:
பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடைகள், வணிக வளாகங்கள் இரவு 9 மணிக்குள் மூட உத்தரவு. திருமண நிகழ்வுகளில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும்.
பாகிஸ்தானில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் போரால் ஏற்பட்ட எரிபொருள் பற்றாகுறை பாகிஸ்தானில் இன்னும் சீரடையாத நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.
அதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும் எனவும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்கும், உணவகங்கள் இரவு 11 மணிக்கும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. குறைவான கேஸை பயன்படுத்தும் வகையில், திருமண நிகழ்வுகளில் ஆடம்பரத்தைத் தவிர்த்து ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
அரசுத் துறைகளில் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேநீர், உணவு செலவுகளை தவிர்க்க அரசுத் துறை கூட்டங்கள், உச்சிமாநாடுகள், கருத்தரங்குகளை காணொலி வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும் எனவும், இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.


