ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதேபோல, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த 9க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, பிரதமரின் அறிவுரைப்படி, ஜம்மு காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நேற்று, பஹல்காமில், ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிவைத்து, பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்தனர். இந்தத் தாக்குதலில் அப்பாவிகளின் உயிர்களை இழந்திருக்கிறோம். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளோம். தங்கள் விருப்பத்திற்குரியவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்கள் மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் இருப்பவர்களும் அடையாளம் காணப்பட்டு, விரைவில் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை நான் நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஒருவரையும் விடமாட்டோம்” எனத் தெரிவித்தார்.
In a remarkable act of humanity, a Muslim driver from Kashmir sheltered a group of stranded tourists in his own home during a tense situation. The driver not only provided them with food and safety but also ensured their well-being until further help could arrive.#KashmirNews… pic.twitter.com/QP7KsXIjlz
— Pune Mirror (@ThePuneMirror) April 23, 2025
இந்நிலையில், காஷ்மீர் முஸ்லிம் கார் ஓட்டுநர் ஒருவர் சில சுற்றுலா பயணிகளை தனது இல்லத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, உணவு வழங்கி அவர்களை பார்த்துக்கொண்டதும், அதற்கு அந்த சுற்றுலா பயணிகள் அவரின் கருணைக்கு நன்றி தெரிவித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆதில் எனும் முஸ்லிம் ஓட்டுநர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்ததும், சுற்றுலாப் பயணிகளை எந்தவித தயக்கமும் இன்றி, அவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உடனே தனது வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றுள்ளார். பிறகு அவர்களை அங்கு பாதுகாப்பாக உணரவைத்த ஆதில், அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார். அதன்பின் அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற ஆட்கள் வந்தபிறகு அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.
இணையத்தில் வைரலாகிவரும் அந்த வீடியோவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்றும் நாங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம் என்றும் பேசுகிறார்.
அதேபோல், ஆதிலின் பாதுகாப்பில் இருந்து சுற்றுலாப் பயணிகள், அந்த வீடியோவில் ஆதில் காட்டிய கருணை மற்றும் தாராள மனப்பான்மைக்கு நன்றி என தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Jammu and Kashmir
April 23, 2025 7:45 PM IST

