ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், ஜம்மு பகுதியில் வசித்துவருபவர் சிஆர்பிஎஃப் வீரர் முனீர் அஹமத். இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனல் கான் எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது இவர் சிஆர்பிஎஃப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து எ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முனீர் அஹமத், “எனக்கு நீதி வேண்டும், நான் ஒரு ராணுவ வீரர். இது ஏன் நடந்தது? நான் எனது துறைக்கு அனைத்து விவரங்களையும் கொடுத்து வருகிறேன். நான் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் முறையீடு செய்ய இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “எங்கள் திருமணம் மே 24, 2024 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. என் மனைவி குடும்பத்தினரும், எங்கள் குடும்பமும் உறவினர்கள். அவர்கள் தற்போது பாகிஸ்தானில் வசிக்கிறார்கள். பிரிவினைக்கு முன்பு, இரு குடும்பங்களும் இங்கே ஒன்றாக வசித்து வந்தன.
நான் சிஆர்பிஎஃப்-ல் பணி புரிந்துவந்ததால், எங்கள் திருமணத்திற்காக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி எனது துறைக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டேன். அதனைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் நிர்வாகம் சில ஆவண தகவல்களை கேட்டனர். அவற்றை நான் சமர்பித்தேன். அவை அனைத்து டெல்லி சிஆர்பிஎஃப் இயக்குநகரத்திற்கு அனுப்பட்டு, ஐந்து மாதங்கள் கழித்து எனக்கு பதில் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எனது திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்ததும், திருமண பதிவு சான்றிதழ், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் திருமணம் நடந்த தகவலையும் சிஆர்பிஎஃப் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்தேன்.
அதன்பிறகு கடந்த பிப்ரவரி 28, 2025 அன்று, என் மனைவிக்கு விசா கிடைத்து இந்தியா வந்தார். என் மனைவி வந்ததும் என் பட்டாலியனுக்குத் தகவல் தெரிவித்தேன். துணைத் தளபதிக்கு விசா நகலை அனுப்பினேன். மார்ச் 4, 2025 அன்று நாங்கள் நீண்ட கால விசாவிற்கு விண்ணப்பித்தோம், கள சரிபார்ப்பு நடந்தது. FRRO ஜம்முவுடன் எங்களுக்கு ஒரு நேர்காணல் இருந்தது. அவர்கள் விசாவிற்கு நேர்மறையான பரிந்துரையை அனுப்புவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 26 அன்று, நான் சுந்தர்பானியில் உள்ள தலைமையகத்தை அடைந்தபோது, திடீரென்று 41 (பட்டாலியன்)-க்கு தகவல் தெரிவிக்கச் சொன்னார்கள். 41 பட்டாலியனில், நான் என் முழு கதையையும் சொல்லி விளக்கமும் சொன்னேன். நான் டிஜிக்கு ஒரு கடிதம் எழுதினேன், அங்கேயும் எல்லாவற்றையும் குறிப்பிட்டேன். அந்த விண்ணப்பம் ப்ராசசில் இருக்கின்றது. இந்த நிலையில், சம்பவம் (பஹல்காம் தாக்குதல்) நடந்தது. நேற்று, திடீரென்று நான் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நான் என் மனைவியை இங்கேயே வைத்திருந்தேன் என்றும், துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதாலும், நான் பணியில் இருந்து நீக்கப்பட்டேன் என எனக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், நான் என் துறைக்குத் தகவல் தெரிவித்தேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆவணத்தைச் சமர்ப்பித்து அவர்களிடம் தெரிவித்தேன்.
எனக்கு நீதி வேண்டும், நான் ஒரு ராணுவ வீரர். இது ஏன் நடந்தது? நான் எனது துறைக்கு அனைத்து விவரங்களையும் கொடுத்து வருகிறேன். நான் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் முறையீடு செய்ய இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Jammu and Kashmir

