நமது நிருபர்
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற சிந்தூர் ஆபரேஷன் சிறப்பு விவாதத்தில் என்.ஆர்.இளங்கோ பங்கேற்றுப்பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிஆர்எஃப் அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு எடுத்த நடவடிக்கை என்றும் அது ஒரு ராஜீய வெற்றி என்றும் கூறியதை பாராட்டுகிறோம்.
ஆனால், பிரதமரோ, வெளியுறவு அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ பாகிஸ்தான் – இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் டிரம்ப் கூறியது தவறு, பொய் என்ற ஒற்றை வரியைத்தான் மத்திய அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.